Pages

Monday, December 28, 2009

கண்ணப்ப நாயனார் காட்டும் அன்புநெறி


By: குமரன்

1. அன்பு

அன்பு என்பது உயிர்களின் உடன்பிறப்பு. உயிர் உடம்போடு கூடிப் பிறந்ததே அன்புடன் இப் பூமியையும் பூமியிலுள்ள பொருள்களையும் உயிர்களையும் காதலித்து வாழ்வதற்காம் என வள்ளுவனார் குறிப்பிடுகின்றார்.
அன்போடியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு
என்பது அவரது வாக்கு, அன்பானது குடத்துள் விளக்கு போலவும் உறையுள் வாள் போலவும் ஒருவரிடத்து மறைந்து கிடக்கும். ஆனால் அன்பு வெளிப்படுவதற்குரிய தூண்டல் ஏற்பட்ட வழி அது ஒருவரின் மெய்பாபடுகளின் வழி வெளிப்பட்டு நிற்கும் என்கிறார் வள்ளுவர்.
“அன்பிற்கு முண்டோ அடைக்குந் தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
என்பது வள்ளுவம்

1.1 புதுமுக அன்பு
இங்ஙனம் உயிருடனும் உடம்புடனும் கூடி நிற்கும் அன்பானது முதலில் உயிர் தனக்குக் கிடைத்த உடலையே காதல் செய்யத் தூண்டுகின்றது. அது பின்னர் படிப்படியாகப் படர்ந்து இவ் உடல் வாழ்வுக்கு எவையெவை அவசியமோ அவற்றையெல்லாம் அன்பு செய்ய வைக்கின்றது. தாய் தந்தை சகோதரர், உற்றார், உறவினர், நாடு, மதம், இனம், மொழி என லௌதீக பந்தங்கள் உயிர்களிடத்தில் ஏற்படுவதற்கு அன்பு விதைக்கும் பாசப் படர்ச்சியே காரணமாகும். இங்ஙனம் உலகியல் பொருள்களிலும், இன்பங்களிலும் உயிர் கொள்ளும் அன்புநிலை புறமுக அன்பு எனப்படுகின்றது. இப் புறமுக அன்பு நிலையற்றது ஆன்மாக்களின் நிலையற்ற கருவியாகிய மனவழிப் பிறக்கும் இவ் அன்பானது உலகியல் பற்றுப் பாசங்களுக்கெல்லாம் அடிப்படையாகி ஆன்மாக்களைத் தீமை செய்யத் தூண்டுகின்றது. இதனால் துன்பச் சுழற்சிக்குக் காரணமாகி ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் பிற்பபெடுக்கக் காரணமாயமைகின்றது. ஆதலால் நீர்க்குமிழி போல் நிலையற்றதாய் ~ணநேர பிரீதியை (சிற்றின்பத்தை) மட்டும் தரும் இப்புதுமுக அன்பினைப் ‘பொய்யன்பு’ எனக் குறித்தனர். அசத்தை அசத்தாலறியும் அன்பு எனக் கூறினும் ஒக்கும்.

1.2 அகமுக அன்பு
இதற்கு எதிர்மாறாய் ஆன்மா தன்னையும் தனக்கு உயிர்க்குயிராயுள்ள சிவத்தையும் விரும்பி அவற்றின்பால் அன்புசெலுத்தும் நிலை மற்றொரு வகையானது துன்பக் கலப்புடையதும், சிற்றின்பத்தை மட்டும் தருவனாகிய புறுமுக அன்பினை காலங்காலமாக அநுபவித்து களைப்புப் அந்தரங்க அலுப்புமடைந்த ஆன்மா துன்பக் கலப்பற்றதாய் நீடுநின்று நிலைப்பதாய் நிறைவுள்ளதாய் உள்ள அமரத்துவ அன்பொன்னினைத் தேடும் நிலையில் இவ் அன்பு பிறக்கும் எனக் கூறுவர். புறமுக நாட்டம் முற்றாகக் கெட்டொழிந்து அகமுக நோக்குடன் தன்னையும் தனது தலைவனாகிய சிவத்தையும் பேராமற் பிரியாமல் நிற்கும் அன்புநிலை இதுவாகும். இதனை அகமுக அன்பு எனக் குறித்தனர்.
‘அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தயின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே’ எனத் திருமூலரும்

‘அன்பினில் விளைந்த ஆரமுதே’

என மாணிக்க வாசகரும் இவ் அன்புநிலையைச் சுட்டுதல் காண்க. சத்தினைச் சத்தினால் அறியக் கிடைக்கும் இவ் அன்பே மெய்யன்பு எனப்பட்டது. இறைவனின் திருவருள் வழிப்பிறக்கும் ‘இந்த அன்பே நீடித்து நிலைக்கக் கூடியதாகும். அடைதற்கரியதாகிய இந்த அன்பு நிலை சித்திக்குமாயின் ஆன்மாக்களுக்குச் சிவமின்றி எதுவும் புலப்படாது நிற்கும். அதன் உள்ளத்திலும் உடலிலும் இனம்புரியாத மாற்றங்கள் ஏற்படும் இதனை –
சிவனிடத்து அன்புடைமைக்கு அடையாளம் அச்சிவ
னுடைய உண்மையை நினைத்தல் கேட்டல்
குhண்டல் செய்தபோது தன்வசமழிதலும் மயிர்க்கால்
தோறும் திவலை உண்டாகப் புளகங் கொள்ளலும்
ஆனந்த அருவி பொழிதலும், விம்மலும் நாத்தழு
தழுத்தலும், உரை தடுமாறலும், ஆடலும் பாடலும்
அவர் உவப்பன செய்தலும் வெறுப்பன ஒழித்தலும் பிறவுமாம்’

எனக்குறிப்பிடுவதாலும் மாணிக்க வாசகர்
‘மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரையார் கழந்கென்
கைதான் தலைமேல் வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ள
பொய்தான் தவிர்த்துப் போற்றி சயபோந்ந் என்றே
கைதான் நெகிழவிடேன்…………

எனக் கூறுவதாலும் உணர்க. ஆன்மாக்களுக்கு நிலைத்த இன்பத்தினை அதாவது பேரின்பத்தினை தரும் இவ் அன்புநிலையை அடைய முயற்சிப்பதே ஆன்மாவின் வாழ்வியல் இலட்சியம் எனலாம். பேரின்பப் பொருளாக உள்ள ஆண்டவனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்;டு அகமுக அன்பு அல்லது மெய்யன்பு சி;த்திக்கப் பெற்றவர்களே மெய்யடியார்கள் எனப்பட்டனர் இத்தகைய மெய்யடியார்களின் வரலாற்றினையும் அவர்களை ஆண்டவன் ஆட்கொண்ட திறத்தினையும் பாட விளைந்ததே பெரியபுராணமாகும்.

2. பெரியபுராணம்
இறைவன் மாட்டு நீங்காத அன்பு கொண்டு நிலையான பேரின்பப் பெருவாழ்வைத் தேடிக்கொண்ட அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை உரைக்கும் திவ்விய சரிதம் பெரியபுராணமாகும். இவர்களுள் 54 பேர் வகையடியார்கள் 9 பேர் தொகையடியார்கள். மூன்றாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராக இருந்தவரும் சேக்கிழார் எனப் பிற்காலங்களில் சிறப்புடன் அழைக்கப்பட்டவருமான அருண்மொழித் தேவர் இதனை எழுதினார். சோழர் காலத்தில் மீண்டும் தலைதூக்கிய அவைதிக மதச் செல்வாக்கிலிருந்து சைவ சமயத்தை மீட்டெடுக்கவும், சைவசமயிகள் பால் தமது மதம் பற்றிய உயர்வான மனப்பதிவை ஏற்படுத்துதற்கும் சைவசமயம் பால் நம்பிக்கையைக் கட்டி வளர்ப்பதற்கும் என இந்நூல் செய்யப்பட்டதாக அறியமுடிகின்றது. சமகாலத்தில் முனைப்புற்று நின்ற சமூகத்தேவையை மனங்கொண்டு சேக்கிழார் படைத்த இந்நூலுக்கு சுந்தரரின் திருத்தொண்டர் தொகையும் நம்பியாண்டார் நம்பியின்திருத்தொண்டர் தீரவந்தாதியும் முறையே முதனூலாகவும் வழிநூலாகவும் அமைந்தன. தமிழ்நாட்டிலேயே வாழ்ந்து இறைவனின் அன்புக்குப் பாத்திரமான அடியவர்களின் வரலாறுகளை வெறுங் கற்பனையாக அன்றி அவரவர்கள் வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் சென்று தேடித்தொகுத்து சேக்கிழார் இந்நூலைச் செய்திருப்பதை நோக்கும்போது அவரின் திறமையையும், முயற்சியையும் வியவாதிருக்க முடியாது. முதனூல் வழிநூல்களிலுள்ள தகவல்கள் மட்டுமன்றி கல்வெட்டுக்கள், அரச ஆவணங்கள், ஐதீகங்கள், வரலாற்றுக்குறிப்புகள், கர்ணபரம்பரைச் செய்திகள் எனப் பலவும் அவரின் நூலுக்கு மூலாதாரங்களாக அமைந்துள்ளன. இந்நூலில் விதந்துரைக்கப்படும் மெய்யடியார்கள் யாவரும் ஒரே காலப்பகுதிக்குரியவர்கள் அல்லர். பல்லவர் காலத்திலும் அதற்கு முன்னரும் பின்னரும் வாழ்ந்தவர்கள் இயன்றவரை அவர்களது வரலாறுகளை நம்பிக்கைத்தன்மையுடனும் வரலாற்றுணர்வுடனும் சேக்கிழார் தரமுற்பட்டிருக்கின்றார். சேக்கிழார் இதனைப் புராணமாகப் பாட முற்பட்டபோதும் தனது சமகாலத்தில் செல்வாக்குச் செலுத்திய காவிய நடையின் தாக்கத்துக்குத் தாராளமாக உள்ளாகியுள்ளார் என்பது தெரிகின்றது. இதனாலேதான் மெய்யடியார்களில் இவ்வுலகில் அறம் பொருள், இன்பம் வீடு நான்கையும் முறையாக அனுபவித்து வாழ்ந்த சுந்தரரின் வரலாற்றை முதலிலும், இடையிலும், கடையிலும் செருகி இப்புராணத்தைப் பாடியுள்ளார். காவியநடையின் பெருமிதமும், செந்தமிழின் சிறப்பும், பக்திரசமும் ஒருங்கே வெளிப்பட்டு நிற்கும் உன்னத படைப்பாகப் பெரிய புராணத்தைக் கொள்ள முடியும். இறை அன்பில் ஊறித்திளைத்த மெய்யடியார்களின் வரலாற்றைக் கூறுதலால் இதனை அன்புநூல் எனச் சுட்டினும் தவறில்லை.

3. கண்ணப்ப நாயனார் புராணம்
பெரிய புராணத்தில் முதற் காண்டத்தில் மூன்றாவது சருக்கமாகிய இலைமலிந்த சருக்கதில் பத்தாவதாக கண்ணப்பநாயனார் புராணம் அமைந்துள்ளது. நூற்று எண்பத்தொரு திருவிருத்தங்களில் கண்ணப்ப நாயனாரின் வரலாற்றினைப் பக்திரசம் சொட்டச் சொட்டச் சேக்கிழார் பாடியுள்ளார். கண்ணப்ப நாயனார் புராணத்துக்குரியதெனக் கருதப்படும் ஐந்து உதிரியான பாடல்களும் அனுபந்தமாகச் சேர்த்துப் பதிப்பிக்கபட்டுள்ளன. இவ் உதிரிப்பாடல்கள் சேக்கிழாரின் செய்யுள்கள் எனக் கொள்ளப்படுவதிலும் பார்க்கப் பிற்காலங்களில் ஏடெழுதியோர் சேர்க்கைகள் எனக்கொள்வதே பொருத்தமானதாகும்.

கண்ணப்பர் பொத்தொப்பி நாட்டிலேயுள்ள உடுப்பூர் என்னும் இடத்தில் வேட்டுவர் குடியிலே பிறந்தவர். தந்தையார் வேடர் குலத்தலைவர் நாகனும் தாயார் தத்தை என்பாளும் முருகனை நினைந்து வழிபட்டு நேர்த்திகள் செய்ததன் பேறாக நீண்டகாலத்தின் பின் பிறந்த அரும்பெறல் புதல்வன் கண்ணப்பர். இவரின் பிள்ளைத் திருநாமம் திண்ணனனார் என்பது கையில் ஏந்துதற்க அருமையான திணிவினைக் கொண்டவராக அமைந்ததால் திண்ணனானா என்பது காரணப் பெயராயிற்று வேட்டுவ குலத்தவருக்குரிய பண்புகளும் தொழில் சேர்ச்சிகளும் பயிற்சிகளும் பெற்றுத் திண்ணனார் வளர்ந்து வந்தார். இந்நிலையில் நாகனுக்கு முதுமை நெருங்க தனது வேடர் குலத்தலைமைப் பதவியைக் திண்ணனாருக்கு அளிக்க முடிவெடுக்கின்றான். அதன்படி உரிய சடங்கு சம்பிரதாயங்களுடன் திண்ணனாரைக் கன்னிவேட்டைக்கு அவரது நண்பர்களான நாகன், காடன் என்போருடன் கூடவே அனுப்பி வைக்கின்றான். வேட்டையில் ஒரு பன்றி தப்பி ஓட அதனைத் துரத்திக் கொண்டு திண்ணனார் நாகன், காடன் என்போருடன் காளத்திமலையை அண்மிக்கின்றனர். பன்றியும் கொல்லப்படுகின்றது. நாகனின் வழிகாட்டலின்பேரில் திருக்காளத்தி மலையில் உள்ள குடுமித்தேவரை வணங்க திண்ணனார் செல்கின்றார். உள்ளத்தில் இனம்புரியாத மாறுதல் மனதிலிருந்த பாரங்கள் குறைவது போன்ற உணர்ச்சி மலையில் எழுந்தருளியுள்ள குடுமித்தேவரைக் கண்ட மாத்திரத்தே அவர் வயப்பட்டார் கண்ணப்பர். அன்பு பெருக்கெடுத்தோடியது. குடுமித்தேவருக்குப் பணிசெய்வதே தன்கடன் எனக் கொண்டார் தன்னால் செய்யக் கூடிய அத்தனை பணிகளையும் உள்ளன்புடன் செய்தார் அவ்அன்பின் உச்சமாக சிவனுக்காககத் தன் கண்களையே இழக்கத் துணிந்தார். திண்ணனார். இதனால் கண்ணப்பரரியனார் ஆறு நாட்களில் ஆண்டவன் மீது கொண்ட அன்பின் நெருக்கத்தால் சிவனின் வலத்தில் நிற்கும் பேரின்பப் பெருவாழ்வினைப் பெற்றுக்கொண்டார். இதுவே கண்ணப்ப நாயனார் புராணத்தின் கதைச்சுருக்கம்.

கண்ணப்ப நாயனர் புராணத்தின் 42 திருவிருத்தங்களில் திண்ணனாரின் பிறப்பு, வளர்ப்பு, எனும் விடயங்களை விலாவாரியாகச் சேக்கிழார் வர்ணித்துச் செல்கின்றார். 43 ஆம் திருவிருத்தத்திலிருந்து 55 ஆம் திருவிருத்தம் வரை திண்ணனானார்வேட்டையாடப் போவதற்கான சந்தர்ப்பம் வந்து வாய்த்தவகைமையும் அவர் வேட்டையாடப் போவதற்கான ஆயத்தங்கள் நிகழ்ந்த முறைமையும் சுட்டப்படுகின்றன. வேட்டைக்குப் போகும் திண்ணனாரின் வேட்டைச்சிறப்பு 56இலிருந்து 86ஆம் திருவிருத்தம் வரை சுட்டப்படுகின்றது. திண்ணனார். காளத்தி மலைச் சாரரை நண்ணுவதற்குக் காரணமாயமைந்த பன்றி வேட்டை பற்றி 87-94 வரையான திருவிருத்தங்களில் சேக்கிழார் பாடியுள்ளார்.

95இலிருந்து 103 வரையான திருவிருத்தங்கள் திண்ணனார் திருகோனத்திமலையில் ஏறும்போது மனதளவில் எதிர்கொண்ட மாற்றங்களை விபரிக்கின்றது. 104 இலிருந்து 106 வரையான திருவிருத்தங்களில் காளத்தி நாதரைத் திண்ணனார் கண்டவுடன் கொண்ட உளக்கிளர்ச்சி நிலையைச் சேக்கிழார் வர்ணிக்கின்றார். 105ஆம் திருவிருந்தம் முதலாக 154 ஆம் திருவிருத்தங்கள் வரை திண்ணனார் காளத்தி நாதருக்குச் செய்து வந்த பூசனைகள் விபரிக்கப்படுகின்றது. இடையிலுள்ள 134 ஆவது திருவிருத்தம் தொட்டு 141 ஆவது திருவிருத்தம் வரையான 8 திருவிருத்தங்களில் மட்டும் சிவகோசரியார் சிவனுக்குச் செய்யும் பூசனைகள் விபரிக்கப்படுகின்றன. 155 ஆம் திருவிருத்தம் தொட்டு 165ஆம் திருவிருத்தம் வரையான பகுதியில் திண்ணனானின் பூசனைகண்டு சிவகோசரியாருக்கு ஏற்பட்ட துன்பமும் அத்துன்பத்தை நீக்க சிவபெருமான் சிவகோசரியாரின் கனவில் தோன்றித் திண்ணனாரின் அன்பினை வெளிப்படுத்தயமையும் கூறப்படுகின்றன. 166 ஆம் திருவிருத்தம் முதலாக 181 வரையான திருவிருத்தங்களில் சிவன் திண்ணனாரின் பக்தியை அல்லது அன்பை உலகறியச் செய்யும் விதமாக தன் கண்ணிலிருந்து இரத்தம் வடியச் செய்தமையும் அங்ஙனம் குருதி வடிவதை தடுக்க திண்ணனார் தன் கண்ணிடந்தப்ப முயன்றமையும் சிவானல் தடுத்தாட் கொள்ளப்பட்டு வலம் நிற்கும் போது பெற்றமையும் கூறப்பட்டுள்ளன. கண்ணப்ப நாயனார் புராணத்தின் கட்டமைப்பு இதுவாகும்.

கண்ணப்பரின் அன்பின் திறம்

ஆன்மா இவ்வுடம்புடன் கூடியிருக்கும் போதோ… சிவத்துவத்தை அல்லது முக்தியை அமை;ந்தவர்கள் சீவன்முத்தர்கள் எனப்படுவர். ஆங்ஙனம் சீவன் முத்தராய் வாழ்ந்தவர் மாணிக்கவாசக சுவாமிகள் அவன் கண்ணப்பரின் அன்பின் திறத்தை
‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னபன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டு
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப் பொன் நீற்றுக்கே சென்றூதாய் கோத்தும்பி
எனப்பாடுகின்றார். கண்ணப்பனின் அன்பு ஒப்பு நோக்கப்படமுடியாத ஈடிணையற்றது. தனித்துவமானது என்பது மாணிக்கவாசகரின் கருத்து. அன்பின் மேலெல்லைக்கு இவர்தான் என மாணிக்கவாசகர் கண்ணப்பர் பற்றித் தரும் ஆர்வ மதிப்பீடு அன்புநிலை மதிப்பீட்டில் ஒருமலையிலக்கு என்கிறார் பண்டிதர் மு. கந்தையா. மாணிக்கவாசகர் மட்டுமன்றி சம்பந்தரும் அப்பரும் இப்பூவுலகில் மற்றெதுவுமின்றி வாழ்ந்த பட்டினத்துப் பிள்ளையும் கண்ணப்பரின் அன்புக்கு நெக்குருகிக் கவி செய்ததைக் காணும் போதும் அவ் அன்பு சொல்லுந்தரமல்ல என்பது புலப்படும். திருக்களிற்றுப்படி யாகும்.
‘கண்ணப்ப னொப்பதோ ரனீபின்மை என்றமையாற்
கண்ணப்ப னொப்பதோ அன்பதனைக் - கண்ணப்பர்
தாமறிதல் காளத்தியாரறித லல்லதுமற்
றாரறியு மன்பன் றது.
எனக் கூறிக் கண்ணப்பனின் அன்பின் உச்சத்தை வெளிப்படுத்தியிருத்தல் காண்க.

காணமுன் காதல்
கண்ணப்பரின் அன்பின் திறத்தினை ‘கூடும் அன்பில் கும்பிடலேயன்றி வீடும் வேண்டா விறலினரான மெய்யடியார்களே வியந்தமைக்கான காரணம் யாது என்ற கேள்வி மனதுள் எழலாம். இதற்க விடை காண்பதற்கு முன்னதாக அன்பின் மூன்று நிலைகளை அடையாளங் காண்பது அவசியமானதாகும். ஒருவரைப் பற்றிக் கேட்டமாத்திரத்தே அவர் மாட்டு அன்புபெருகி நிலையழிதல் தலையன்பு எனப்படும். ஒருவரைக் கண்டமாட்டு அவரிடத்து நிகழும் அன்பு இடையன்பு எனச் சுட்டப்பட்டது . இவ்வாறன்றி ஒருவரோடு கூடிப்பழகிய பின் உண்டான அன்பு கடையன்பு எனப்பட்டது. கண்ணப்பர் மேலே சுட்டப்பட்ட அன்புநிலைகளுள் தலையன்பின் வழி நின்றவர். ‘கொல்லெறி குத்தென்று ஆர்த்துக் குழுமிய ஓசையன்றி’ வேறெதுவும் அறியாத வேட்டுவ குலத்திலே பிறந்து வளர்ந்த கல்வியறிவேயற்ற கண்ணப்பருக்குள்ளும் ‘ஈந்தச் சேணுயர் தீருக்காளத்தி மலைமிசை எழுந்துசெவ்வே கோணமில் குடுமித்தேவர் இருப்பர் கும்பிடலாம்” என நாணன் கூறத்கேட்டதுமே அன்பு சுரக்கத் தொடங்கிவிட்டது. உலக பந்த பாசங்களில் மூழ்கி தன்பெற்றோர் தன்சுற்றம், தன் உலக நன்மைகள் என வாழ்ந்தவருக்கு திருவருள் செறிவு ஏற்படுவதற்கான திருப்புமுனை இதுதூன்.

‘துடியடியன் மடி செவியன் துறுகயமுனி தொடரார்
வெடிபடவிரி சிறுகுருளைகன் மிசைபடுகொலை விரவார்.
அடிதளர்வுறு கருவுடையன அணைவுறு பிணை
அலையார்
கொடியன எதிர் முடுகியும் உறுகொலைபுரிசிலை
மறவோர்”
என உயிர்கள் மாட்டு விளைந்த அன்பு, அன்பினில் விளைந்த ஆரமுதாகிய சிவனிடத்து அரும்பத் தொடங்கும் நிலை இதுவெனலாம். குடுமித்தேவரின் நாமத்தைக் கேட்ட மாத்திரத்தே கண்ணப்பரின் உள்ளத்தில் அகமுகமாகப் பாயத்தொடங்கும் அன்பின் பெருக்கத்தைச் சேக்கிழார்.
“ஆவதென் இதனைக் கண்டிங்கு அணை தொறும்
என்மேல் பாரம்
போவதொன்றுளது போலும் ஆசையும் பொங்கி
மேன்மேல்
மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா
நிற்கும்.
தேவரங்கு இருப்பது எங்கே போ” என்றார் திண்ணனார் தாம்.

எனக் குறிக்கின்றார். கண்ணப்பரின் உள்ளத்தில் கிளர்ந்தெழும் அகமுகப் பாய்ச்சலான அன்பினால் அவர் உள்ளத்தில் ஏற்படும் மாற்றிநிலையை அணைதோறும் என்மேல் பாரம் போவதொன்றுளது போலும்’ எனும் தொடரால் சேக்கிழார் எடுத்துக் காட்டுகின்றார். பக்குவப்பட்ட ஆன்மாக்களை ஆண்டவன் தடுத்தாட்கொண்டு தன்வயப்படுத்துற்கு முன்னதாக அவ் ஆன்மாக்களில் மூன்று முக்கியமான நிலை மாற்றங்கள் ஏற்படும் எனச் சைவசித்தாந்திகள் கூறுவர். இருவினையொப்பு மலபரிபாகம் சத்தினிபாதம் என்பனவே அவையாகும். நல்வினை தீவினை இரண்டையும் ஒரே தன்மையினதாக எண்ணி உவந்து விடும்நிலை இருவினையொப்பு எனப்படுகிறது. மலபரிபாகம் என்பது ஆணவம், கன்மம் மாயை ஆகிய மும்மலங்களும் ஆன்மாவில் நின்றும் நீங்குதற்கரிய நிலையாகும். இருவினை யொப்பும் மலபரிபாகமும் சிந்திக்கும் ஆத்மாக்களின் மேல் இறைவனின் திருவருட் சக்தி படிந்து அவற்றைத் தன்வயப்படுத்தி நிற்கும் நிலையே சத்தினி பாதமாகும். திருவருளை நாடிச் செல்லும் கண்ணப்பருக்கு சந்தினிபாதம் சாத்தியப்படுவதற்கு முன்னதாக இருவினையொப்பும் மலபரிபாகமும் நடைபெறும் நிலைதான்’ இப் பாரஇறக்கம் போலத் தெரிகின்றது. கல்வியறிவோ வேத ஆகம பரிச்சயமோ. ஆற்ற கண்ணப்பருக்குத் தனக்குள் ஏற்பட்ட இருவினையொப்பு, மலபரிபாக மாற்றங்களை உணர்வதற்கோ அல்லது விளங்கிக் கொள்வதற்கோ முடியவில்லை. தனக்குள் ஏதோ வினோதமான வித்தியாசமான அனுபவம் ஒன்றுமட்டும் ஏற்படுவதை அவரால் உணரமுடிகின்றது. நாணனுடன் மலையை நெருங்க நெருங்க இவ் உணர்வின் அதிகரிப்பும் குடுமித்தேவரைக் காணுதல் வேண்டும் என்ற அந்தரிப்பும் வளர்ந்து வளர்ந்து செல்வதைச் சேக்கிழார் நயம்படக் காட்டியுள்ளார்.

‘தெளிபுணல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார்”
முன்பு செய்த தவத்தினீட்டம் முடிவிலா இன்பமான
அன்பினை எடுத்துக்காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி
மன்பெருங் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி
என்பு நெக்குருகி உள்ளத்தெழு பெருவேட்கையோடும்”
நாணனும் அன்பும் முன்பு தளிர்வரை ஏறத்தாமும்
பேணு தத்துவங்களென்னும் பெருகுசோபனம் ஏறி
ஆணையாம் சிவத்தைச்சார அணைபவர் போல ஐயர்
நீள்நிலை மலையை ஏறி நேர்படச் செல்லும்போதில்”

முனிவர்களும் யோகிகளும் தவசிகளும் பலகாலம் முயன்று அடையத்தக்க மலபரிமாக நிகழ்வு கண்ணப்பருக்கும் சித்திக்கின்றது. அதுவும் பிரயாசைப் படாமல் சித்திக்கிறது இதற்குக் காரணம் ‘முன்பு செய்த தவத்தின் ஈட்டம் என்கிறார். சேக்கிழார் கண்ணப்பருக்குக் கிடைத்த இப்பேறு முன்வினைப் பயனாக வந்தது என்பது சேக்கிழார் கருத்து. எமது பிறப்புக்கும் பிறப்பில் நாமடையும் இன்பதுன்பங்களுக்கும் அடிப்படை நாம் செய்த வினைகளேயாகும். வினைகள் நல்வினை, தீவினை என இரண்டு வகைப்படும். இரண்டுமே பிறப்புச் சுழற்சிக்குக் காரணமாகி விடுகின்றன. இதனால்தான் ஆத்ம ஈடேற்றத்துக்கு இவையிரண்டும் விலங்குகள் போலத் தடையாகவுள்ளன எனச் சைவசித்தாந்திகள் குறிப்பிடுவர்.தீவினையை இரும்பு விலங்கு எனக்குறிப்பிட்டால் நல்வினையை பொன்விலங்கு எனச் சுட்டலாம். விலங்குகளைச் செய்த பொருள் வேறுபட்டாலும் அவற்றின் பணி ஒன்றுதான் என்று ஆத்மா நல்வினை தீவினை இரண்டும் பிறப்புச் சுழற்சிக்குக் காரணம் என உணர்ந்து அவற்றை சிவார்ப்பிதம் செய்யமுயல்கின்றதோ அன்றே அதற்குத் திருவருள் கிட்டுகின்றது.

சர்வதர்மான பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அகம் துவாம் சர்வ பாபேப்பியாக மோ~யாமி

எனப் பகவான் கண்ணன் கீதையிலே உபதேசம் செய்கின்றார். ஓர் ஆத்மா அனுபவித்ததும் அனுபவிக்கப் போகின்றதுமான வினைத்தொகுதி மூன்று வகைப்படும் ஒன்று சஞ்சிதம்” இரண்டு பிராப்தம்: மூன்று ஆகம்யம். ஆத்மா முற்பிறப்புத் தொடர்ச்சியில் சேர்த்துக்கொண்ட வினைத் தொகுதியே பிராப்தம் எனப்படுகிறது. இப்பிறப்பிலே அனுபவிப்பதற்கென அதற்கு நியமிக்கப்பட்டுள்ள பழவினைத் தொகுப்பின் ஒருபகுதி ஆகம்யம் எனப்படுகின்றது. அனுபவித்தவையோ எஞ்சியுள்ள பழவினைத் தொகுதி சஞ்சிதம் என வழங்கப்படுகின்றது. கண்ணப்பர் முன்பு செய்த தவம், புண்ணியம், யோகம் இவற்றினால் இப்பிறப்பில் ஆகம்யமாகக் கிடைத்த பெரும் பாக்கியமே இம் மலபரிபாக நிலை எனக் குறிப்பிடினும் தவறில்லை. சேக்கிழார் ‘முன்பு செய்த தவத்தினீட்டம் என வாயாரப்புகழ்வது இதனைத்தான். இதனடிப்படையிலும் கண்ணப்பர் பற்றிய சில ஐதீகக் கதைகளை மையமாகக் கொண்டும் காளத்திபுராணம் கண்ணப்பரின் பூர்வ ஜென்மக் கதையொன்றினைப் புனைந்துரைப்பது இவ்வித்தில் நோக்கத்தக்கதாகும். மஹாபாரத இதிஹாசக் கதாபாத்திரமான அருச்சுணனுடன் கண்ணப்பரைத் தொகுத்துக் காட்டும். இத்தலபுராணம் அருச்சுணனின் மறுபிறப்பே கண்ணப்பர் எனக் குறிப்பிட்டு அது தொடர்பான கதையொன்றினையும் பக்திரசம் பொங்க விரித்துரைத்துச் செல்கின்றது. காளத்தி நாதரின் நாமத்தைக் கேட்ட மாத்திரத்தே கண்ணப்பரிடத்து ஏற்பட்ட உள்ளுணர்வு மாற்றங்களை இயன்றவரையில் வார்த்தையில் வடித்துவிட வேண்டும் என சேக்கிழார் திணறுவதை மேற்போந்த பாடல்வரிகளால் புலனாகும். ‘அளவிலா ஆர்வம் பொங்கி ‘மன்பெருங்காதல் கூர’ ‘என்பு நெக்குருகி உள்ளத்தெழும் பெரு வேட்கையோடும், எனவரும் பாடல் வரிகளில் சுரக்கும் பக்திரசம் நோக்கத்தக்கதாகும். கண்ணப்பர் காளத்திமலையை நோக்கிச் செல்வதை நீள் நிலை மலையை ஏறி நேர்படச் செல்லும் போதில்’ எனக்குறிப்பிடுகின்றார். இதுவரை காலமும் புலன்களின் வழி போக்கற்று ஊசலாடிய ஆத்மா இப்போ சிவத்துவத்தினை நோக்கி நேர் வழியில் செல்லத் தொடங்குவதை சேக்கிழார் நயம்பட பாடலில் பொதிந்துள்ளார்.

கண்டவுடன் காதல்
குடுமித்தேவர் திருக்காளத்திமலையில் இருக்கிறார் எனக் கேள்விப்பட்டது முதற்கொண்டே இனம்புரியாத இன்பப் பெருக்கிலும் அன்புப் பெருக்கிலும் அகப்பட்டுத் திணறிய கண்ணப்பர் சிவலிங்கத் திருமேனி வடிவினராய் குடுமித்தேவர் வீற்றிருப்பதைக் கண்டவுடன் மேலும் புளகாங்கிதம் கொள்கின்றார். மலபரிபாகம் அடைந்து சுத்தாத்மாவாக வந்திருக்கும் கண்ணப்பர் மீது குடுமித்தேவரின் அருட்பார்வை படுகின்றது நயன தீட்சை ( ) நடைபெறுகின்றது திருவருள் கண்ணப்பருக்குச் சித்திக்கின்றது. முன்பு மலையிசை ஏறுங்கால் மனதில் இருந்த உலக விவகாரங்களாகிய பாரங்கள் இறங்க இறங்க திருவருள் ஏற்றமும் படிப்படியாக நிகழ்ந்ததைச் சுட்டிக் காட்டிய சேக்கிழார் இங்கே இறைவனின் அருட்பார்வைக்குட்பட்டவுடனே திருவருள் கண்ணப்பரில் முழுமையாக நிறைந்தது என்கிறார். சத்தினி பாதநிலையைக் கடந்த கண்ணப்பர் திருவருள் வடிவமேயானார். சீவன் முக்தியாகிய அதியற்புதநிலை அவருக்கு சாத்தியமானது
‘அங்கணர் கருணை கூர்ந்த அருள் திருநோக்கம்
தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு எய்தத்
விட்டகல நீங்கிப்
பொங்கிய ஒளியின் நிழல் பொருவிலன் புருவம் ஆனார்”

எனக் குறிப்பிடுகின்றார் சேக்கிழார். திருவருள் வடிவாய் நிற்கும் கண்ணப்பருக்கு குடுமித்தேவரைக் கண்ட மாத்திரத்தே அன்பு தாரை தாரையாகக் கொட்டத் தொடங்குகின்றது. காந்தத்தைக் கண்டதும் இரும்பு வேகமாய் அதனை நோக்கி அதனுடன் இணைந்து கொள்வதைப் போல குடுமித்தேவரை நோக்கி ஓடிச் சென்று அப்படியே அவரை ஆலிங்கனம் செய்து கொள்கின்றார்.
‘மாகமார் திருக்காளத்தி மலை எழு கொழுந்தாயுள்ள
ஏகநாயகரைக் கண்டார் எழுந்த பேருவகை அன்பின்
வேகமானது மேற்செல்ல மிக்கதோர் விரைவினோடு
மோகமாய் ஓடிச்சென்றார் தழுவினார் மோந்துநின்றார்”

எனும் பாடல்வரிகளில் கண்ணப்பரின் அன்பின் விகசிப்பினை அடையாளங் காட்டுகின்றார் சேக்கிழார். திருத்தாண்டகத்திலே
‘முன்னர் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னரவருடைய நாமம் கேட்டாள்
பெயர்த்துமவனுக்கே மிச்சியானாள்
அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தால்
அகன்றாள் ஆதாரத்துள் அகப்பட்டாள்
தன்னை மறந்தாள் தன்னாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தானே”

என அப்பர் காட்டும் நாயக நாயகி பாவம் கண்ணப்பரின் அன்புப் பெருக்கிலும் ஏற்படுகின்றது. தலைவனின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே பிச்சித்து தலையன் பின் எல்லைக்குச் சென்றுவிடும் ஆத்மாவுக்குப் பின் அந்தலைவனைக் காணவும், கூடவும் நேர்ந்தால் அவ் அன்பின் பெருக்கம் எவ்வாறு எல்லை கடந்து விடுமோ அந்நிலையைக் கண்ணப்பர் அடைந்தார். அவ்வன்பின் எல்லை கடந்த வெளிப்பாடாக அவர் உரோமங்கள் சிலிர்க்கின்றன. பெருமூச்சு வெளியேறுகின்றது. கண்களால் கண்ணீர் அருவிபோலப் பாய்கிறது என அந்நிலையைக் கவிதை வரிகளுக்குள் அடக்குகின்றார் சேக்கிழார்.

‘நெடிது போதுயிர்த்து நின்று நிறைந்தெழு மயிர்க் கால் தோறும்
வடிவெலாம் புளகம் பொங்க மலர்க்கண்ணீர் அருவி பாய
என வருதல் காண்க.
‘மெய்தானரும்பி விதிர் விதிர்த்து
உன் விரையார் கழந்கென
கைதான் தலைமேல் வைத்துக்
கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்த்து உன்னைப்
போற்றி சய போற்றியென்றே
கைதான் நெகிழவிடேன் உடையாய்
என்னைக் கண்டு கொன்றே

என மாணிக்க வாசகர் விபரிக்கும் பக்திப் பரவசநிலையுடன் கண்ணப்பரின் நிலை ஒப்பிட்டு நோக்கத்தக்கதாகும். அவ்வேளையின் கண்ணப்பர் வாயிலிருந்து வரும் ‘அடியனேற் கிவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சேர் எனும் வார்த்தை ஆண்டவனிடத்து அவர் கொண்ட அன்பின் வெளிபாட்டுக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு ‘தேடிக் கண்டு கொண்டேன் திருமாலோடு நான்முகனும் காணவொண்ணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன்’ என்றும் ‘யானுனைத் தொடர்ந்து சிக்கெனக் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே’ என்ற திருமுறை வரிகள் இங்கு ஒப்பிட்டு நோக்கத்தக்கன. ஆத்மா ஆண்டவனுடன் கொள்ளும் அத்யந்த தொடர்பினை இரண்டு வகைப்படுத்திக் கூறுவர் ஒன்று மக்கட் சம்பந்தம் மற்றயது மார்ச்சார சம்பந்தம் மக்கடம் என்பது குரங்கு குரங்குக் குட்டி தாயைப் பற்றிக் கொள்வது போல ஆத்மா ஆண்டவனை ‘நீயே கதி’ எனப் பற்றிக் கொள்வது மக்கட சம்பந்தம் மார்ச்சாரம் என்றால் பூனை, பூனை தனது குட்டியைத் தான் செல்லும் இடங்களெல்லாம் காவிச் சென்று பாதுகாப்பதுபோல ஆண்டவனே ஆன்மாவை காத்து ரட்சிப்பான். இவற்றுள் கண்ணப்பர் மக்கட் சம்பந்தமாக நிற்கிறார். ஆண்டவனை விட்டுப் பிரியக் கூட அவருக்கு விருப்பமில்லை அந்தளவுக்கு அன்பின் பெருக்கில் அவர் மூழ்கிவிடுகிறார் அன்பே வடிவாகி விடுகின்றார். இதனைச் சேக்கிழார் “படியிலாப் பரிவுதானோர் படிவமாம் பரிசு தோன்ற” எனக்குறிப்பிடுதல் நயக்கத்தக்கதாகும். இதனையே மின்னுமோர் இடத்தில்
‘முன்பு திருக்காளத்தி முதல்வனார் அருள்நோக்கால்
இன்புறு வேதகத் திரும்பு பொன்னானாற் போல் யாக்கைத்
தன்பரிசும் வினையிரண்டும் சாருமல மூன்றுமாத
அன்பு மிழம்பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ”
என்கிறார். கண்ணப்பனிடத்திலுள்ள அன்பு அவருள் மறைந்துகிடக்கிவில்லை அது பிழம்பு போல வெளிப்பட்டுப் பிரகாசித்தது என்கிறார் சேக்கிழார்.

கண்டபின் காதல்
இறைவன் மாட்டு ஆன்மா கொள்ளும் அன்பு அல்லது பக்தி அதன் நிலையைப் பொறுத்து மந்தரம். மந்தம், தீவிரம் தீவிரவாதம் என நால்வகைப்படும். அரக்கானது வெய்யிலின் முன் இருந்து வெதும்புதல் போல்வது மந்தரபக்தி. மெமுகாவது வெய்யிலுக்கு எதிர்ப்படின் உருகுதல் போல்வது மந்தபக்தி நெய்யானது சூட்டுக்கு இளகுதல் போல்வது தீவிரபக்தி: தைலத்தாரையானது சிறிதும் இடையறாது ஒழுகுதல் போல்வது தீவிர வாத பக்தி எனப்படும். கண்ணப்பர் இறைவரை குடுமித்தேவரைக் - கண்டமுதல்நாள் தொட்டு தொடர்ந்து வந்த ஆறுநாட்களும் தீவிரவாத பக்தி நிலையிலேயே தன்னை நிலைநிறுத்தியிருந்தார். இறைவனிடத்து இடையறாத அன்பினைச் சொரிபவராக தன் பரிமறந்து தூக்கம் மறந்து, சுற்றத்தை மறந்து உடல் அலுப்பினை அல்லது களப்பினை மறந்து காளத்தி நாதருக்கே தன்னை அர்ப்பணித்தவராக விளங்கினார். காளத்தி நாதரை விட்டுப் பிரிவதற்கு அவர் மனம் ஒட்டவில்லை. மாறாக வனவிலங்குகள் சூழ இருக்கும் இக்காட்டில் ‘பெருமான் துணையின்றி எங்ஙனம் தனித்திருப்பார்? எனக் கலங்குகின்றார். காட்மடை கவனிப்பாரின்றியிருக்கும் அண்ணலுக்கு யார்தான் உணவிட வல்லார்? என மனக் கிலேசமுறுகின்றார். சிவகோரரியார் முன்னே செய்துவிட்டுப் போன பூசனைகளில் அவருக்குத் திருப்தியே வரவில்லை. சிவனுக்கு நல்லுணவும் பாதுகாப்பும் தன்னால் மட்டுமே தரமுடியும் என்பது கண்ணப்பரின் உறதியான நம்பிக்கையாக இருந்தது. கண்ணப்பரின் உள்ளத்தில் விளைந்த உண்மையான அன்பின் வெளிப்பாடுகளே இவ்வுணர்வுகள் எனலாம்.
‘உள்நிறைந்து எழுந்ததேனம் ஒழிவின்றி ஆரா அன்பில்
திண்ணனார் திருக்காளத்தி நாயனார்க்கு இனிய செய்கை
எண்ணிய இவை கொலாம்” என்றிது கடைப்பிடித்துக் கொண்டவ
அண்ணலைப் பிரியமாட்டா அளவிலாதரவு நீட”
என்கிறார் சேக்கிழார் கண்ணப்பர் சிவன்மீது கொண்ட அன்பினை ‘ஆரா அன்பு’ எனச் சேக்கிழார் சுட்டியிருப்பது காண்க. ‘ஆரா அன்பாய் அளவில்லாப் பெம்மானாய்’ அருள்பாலிக்கும் ஆண்டவனிடத்திலேயே ‘ஆராஅன்பனாய்’ சிக்கெனப் பிடித்து நிற்கிறார் கண்ணப்பர். இந்நிலையை நாணனின் வார்த்தைகளால் மிக அழகாகச் செதுக்கியுள்ளார் சேக்கிழார்:
‘அங்கிவன் தேவர் தம்மைக் கண்டணைத்துக் கொண்டு
வங்கினைப் பற்றிப் போதா வல்லுடும்பென்ன நீங்கான்”

என வருதல் காண்க. உடும்பு வளைந்த உள்ளிடமுற்ற மரக்கொம்பரினை அசையாமல் உறுதியாகப் பற்றிப்பிடித்து நிற்பது போன்று கண்ணப்பர் சிவனை விட்டுப் பிரிய மனமின்றி நின்றார். எனினும் சிவனுக்குப் பசி ஏற்படுமே என்ற எண்ணம் அவரைச் சற்றுப் பிரிந்து செல்லத் தூண்டினாலும் அச் சிறிதுநேரப் பிரிவுதானும் அவருக்குப் பெருவேதனையைத் தந்ததை.
போதுவார் மீண்டு செல்வர் புல்லுவர் மீளப்போவர்
காதலின் நோக்கி நிற்பர் கன்றகல் புவிற்றாய் போல்வர்
‘நாதனே! அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே
கோதறத் தெரிந்து வேறு கொண்டிங்கு வருவேன்” என்பார்.
எனச் சுட்டுகின்றார் சேக்கிழார். சிவனைப் பிரிகையில் கண்ணப்பரிடத்து எழுந்த அந்த நிலையை மேலே காட்டிய திருவிருத்தம் மிகத் தெளிவாகக் காட்டியுள்ளது. தன்னைத் தசரதர் சக்கரவர்த்தியாகவும் எல்லாம் வல்ல வி~;ணுப்பரம்பொருளை இராமனாகவும் கற்பனைசெய்து வாத்சல்ய பாவநிலையில் நின்று பாடல்களைப் பாடிய குலசேகர ஆழ்வாரின் வா போடுவாய் இன்னுமொருகால்…” எனத் தொடங்கும் திருப்பாடல் இதனுடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கது இராமனைப் பரிய குலசேகர ஆழ்வார் பட்டபடும் துன்பமும் வேதனையும் கண்ணப்பரிடத்தும் காணப்படுகின்றன. அன்பின் நெருக்கத்தால் வந்த நிலை இது.

சிவனுக்கு உணவு கொணரப் போந்தவர் வேட்டையாடிய விலங்கின் மென்மையான இறைச்சிப் பகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை எரியில் வாட்டி, தானும் சுவைத்துப் பார்த்து நன்றாக இருக்கிறது எனக் கருதியவற்றை மட்டும் கல்லையில் வைத்துக்கொண்டு வருகின்றார். உணவுண்பதற்கு முன் சிவன் திருமஞ்சணமாட வேண்டுமே அதனால் வாயில் நீர் மொண்டு வருகின்றார். திருமஞ்சனமாடிபின் இறைவனை அலங்கரிக்க வேண்டுமே பூக்களைக் கொய்து தன் குருமிமிசை செருகிக் கொண்டு வருகின்றார். சிவகோசரியார் செய்து விட்ட பூசனைகளையெல்லாம் தன் காற் செருப்பினால் அகற்றுகின்றார். வாயில் மொண்டு வந்த நீரால் மஞ்சன மாட்டி, குடுமியில் செருகி வந்த மலரால் அலங்காரம் செய்கின்றார். கண்ணப்பரின் இச் செய்கைகள் சாதாரண நிலை நின்று பார்க்கும்போது அபத்தமாகவே தெரிகின்றன. இறைச்சியுணவைப் படைப்பதா? அதுவும் எச்சில்படுத்திய உணவையா படைப்பது? வாயில் மொண்ட நீரால் சிவனை அசூசியப்படுத்தலாமா? ஏலவே சூடிக் களங்கப்படுத்திய பூக்களை இறைவனுக்குச் சார்த்தலாமா? குhலடியால் இறைவனை அவன் முன்னாலுள்ள பீடங்களைச் சுத்தம் செய்யலாமா? இவையெல்லாம் சிவ தூ~ணைகள் அல்லவா? என்ற கேள்வி எழ நியாயமுள்ளது. ஆனால் இவையெல்லாம் திருவருள் நிறைந்து சிவமே வடிவாகி நிற்கும் ஆத்மா ஒன்றின் உச்சமான அன்பின் வெளிப்பாடுகள் இவை. சிவசேவையை விரும்பி அதனை உள்ளன்புடன் அதனை எப்படிச் செய்தல் வேண்டும் என்னும் வகை தெரியாது செய்யவிழையும் ஆத்மா ஒன்றின் இவ்வாறான செயற்பாடுகளைக் கூட ஆண்டவன் ஏற்றுக் கொண்டான். ஏனெனினல் அவை அன்பினில் ஊறிய ஆத்மாவின் செயற்பாடுகள். குழந்தை தாயை உதைகிறது. அவள் மீது சலம் கழிக்கிறது. தன் கைகளால் விறாண்டுகிறது. அதற்காககத் தாய் கோவிப்பதில்லை. ஏனெனில் குழந்தை எதனையும் புரிந்து செய்வதில்லை தான் ஏதோதாய்க்கு சந்தோ~ம் செய்வதாகவே குழந்தை எண்ணுகிறது. தாய்க்கும் அக்குழந்தையின் செயற்பாடுகள் அன்பினை மென்மேலும் பெருக்குகின்றனவேயன்றி அக்குழந்தை மீது ஆத்திரத்தை வருவிப்பதில்லை. கண்ணப்பரின் அன்பினால் விளைந்த இச்செயல்களும் சிவனுக்குக் குழந்தையின் செயல்கள் போலவே ஆயின. சிவகோசரயாரின் கனவிலே தோன்றி சிவன் கூறியதாக வரும் செய்திகளடங்கிய ஆறுதிருவிருத்தங்களும் கண்ணப்பரின் பக்தியின் அல்லது அன்பின் உச்சநிலையை எமக்குக் காட்டுகின்றன.
“அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவென்றும்
அவனுடைய செயல் எல்லாம் நமக்கினியவாம் என்றும்,
அவனுடையநிலை இவ்வாறறி நீ என்றருள் செய்தார்.

என்கிறார் சேக்கிழார். கண்ணப்பரின் அன்பின் உச்சத்தை வேத ஆகம விற்பனரான சிவகோசரியாரின் பூசனையோடு அருகருகே வைத்துக் காணும்போது அதன் சிறப்பு மேலும் புலனாகின்றது. கல்வியறிவேயற்ற வேடனின் காளத்தி வேடனின் அன்பு கல்லையும் நெக்குருக வைப்பதை சேக்கிழார் மிக அழகாகக் கூறுகின்றார். சிவால் பாராட்டப்படக் கூடிய அளவுக்கு உச்சமான அன்புநெறி கண்ணப்பருடையது. இதனாலேதான் மாணிகக் வாசகர் ‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை’ என வாயாரப் புகழ்ந்து பாடினார்.

கண்ணப்பரின் அன்பின் மற்றொரு பரிமாணம் ஆறாம் நாளில் நிகழ்ந்தது. அவரின் அன்பின் திறத்தை உலகறியச் செய்ய விரும்பிய இறைவன் தன் கண் ஒன்றிலிருந்து இரதம் வடியச் செய்கிறான். இதனைக் கண்டதும் கண்ணப்பரிடத்துக் கொப்பளிக்கும் துன்பம், வேதனை மனக்கிலேசம், பரிவு, பாசம் யார் இதைச் செய்தார் என அடையும் கோபம் முதலான உணர்வுகள் சுட்டிக்காட்டத்தக்கவை. தன் உயிருக்குயிராயுள்ள குடுமித்தேவரின் இந்நிலை அருக்கு பெரும் வேதனையாக அமைகின்றது.

‘பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க் கடுத்ததென்னோ
அவியின் இனிய எங்கள் அத்தனார்க் கருத்ததென்னோ
மேவினார் பிரியமாட்டா விமலனார்க் கடுத்ததென்னோ
ஆவதொன்றறிகிலேன் யான் என் செய்தேன்…”

என்று அலமந்து திரிகின்றார். எதைச் செய்து எப்படிச் செய்து கண்களிலிருந்து குருதி வடிவதைத் தடுக்கலாம் என எண்ணுகிறார். முடிவில் தன் கண்ணை இடந்தப்புகிறார். குருதி சிந்துவது தடைப்படுகிறது. அதைக் கண்டவுடன் கண்ணபர் அடையும் மகிழ்ச்சி அளவிடுதற்கரியதாகும்.
‘ நின்ற செங்குருதி கண்டார் நிலத்தினில் ஏறப்பாய்ந்தார்.
குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும்
நன்று நான் செய்த இந்தமதி” என்ற நகையும் தோன்ற
ஒன்றிய களிப்பினாலே உன்மத்தர் போலமிக்கார்’
என்கிறார் சேக்கிழார் சந்தோ~த்தினால் பயித்தியக்காரன் போல கண்ணப்பர் மாறிவிட்டார் என்கிறார் சேக்கிழார். ஆனால் இடக்கண்ணிலிருந்து இரத்தம் வடியத் தொடங்குகிறது. கண்ணப்பர் கலங்கவில்லை. ஏனெனில் குருதிப்பெருக்கை கட்டுப்படுத்த மருந்தினை அவர் ஏலவே கண்டு கொண்டார். தனது மறுகண்ணையும் இடந்தப்ப முயல்கிறார். இறைவா தரித்திலர் ‘நில்லு கண்ணப’, ‘நில்லு கண்ணப்ப’இ ‘நில்லு கண்ணப்ப’ எனத் தருகின்றார். ஒருதடவையல்ல மூன்று தடவைகள் கண்ணப்பரின் பெயரை உச்சரித்துத் தடுக்கிறார். ஆண்டவன். ஆண்டவனாலேயே பெயர்சுட்டித் தடுத்தாளப்பட்ட தனிப்பெருஞ் சிறப்பு கண்ணப்பருக்குரியது. அவரின் உயர்ந்த அன்புப்பேறு சிவனின் வலத்தில் நின்றும் பெரும்பேற்றைத் தந்தது.

கண்ணப்பரின் அன்பின் உச்சம் எண்ணிப் பார்க்க முடியாத ஒன்று கல்வியறிவற்ற வேடர் குலத்தில் பிறந்தாலும் இறைவனிடத்தில் அன்பு செலுத்துவதில் அவர் உச்சநிலையில் நின்றார். தனது உடல் பொருள் ஆவியனைத்தையும் சிவாப்பிதம் செய்து இறைமயமாகி நின்றவர் அவர். தன்னைப் பற்றிச் சிந்திக்காது தடுத்தாட்கொண்ட தலைவனாக சிவனையே சிந்தித்தபடி வாழ்ந்தார் தனது பசி, தூக்கம் உடல் களைப்பு எல்லாம் மறந்தார். இறைவன் மாட்டு உன்மத்த அன்பு மேலிட வாழ்ந்தார் இதனாலேதான் ஆறு நாட்களிலேயே சிவப்பேறு கிடைக்குப் பேற்றினைப் பெற்றுக்கொண்டார். கண்ணப்பரின் அன்பினை தம்முடன் ஒப்பிட்டு நோக்கிய நாயன்மார்கள் அவ்அன்பிற்கு தம் அன்பு எள்ளவும் இணையில்லையெனச் சுட்டுவதை நோக்கும்போது கண்ணப்பரின் அன்பின் தன்மை இன்னும் வெளிப்பட்டுநிற்கிறது. சேக்கிழார் குறிப்பிடுவது போல கண்ணப்பர் ஓர் அன்புப் பிழம்பே.